search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பிரதேச கொள்ளையர்கள்"

    சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் ரூ.5.70 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான மேலும் 5 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சேலம் நாமக்கல் பகுதியை சேர்ந்த வங்கிகளில் இருந்து பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டன. இப்படி சேகரிக்கப்பட்ட ரூ.342 கோடி பணம் 226 அட்டை பெட்டிகளில் பாதுகாப்பாக அடுக்கப்பட்டு ஒரு ரெயில் பெட்டியில் வைக்கப்பட்டது. இந்த பெட்டியை சீல் வைத்து அதன் வெளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரெயிலின் 19 பெட்டிகளில் பயணிகளும் பயணம் செய்தனர்.

    இப்படி பயணிகளோடு வந்த ரெயிலில் பலத்த பாதுகாப்பையும் மீறி 4 பெட்டிகளை உடைத்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் துப்பு துலங்கியது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், மத்திய பிரதேச மாநில கொள்ளையர்களே இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோப்புப்படம்

    இது தொடர்பாக கடந்த 12-ந்தேதி தினேஷ், ரோகன் பார்பி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் ரெயில் கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோகர்சிங் என்ற கொள்ளையன் உள்பட 5 பேர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அங்கு வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 5 கொள்ளையர்களையும் அம்மாநில கோர்ட்டில் அனுமதி பெற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    காலை 11.30 மணி அளவில் மோகர்சிங் உள்ளிட்ட 5 பேரும் சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் பிறகு புழல் சிறையில் அடைக்கப்படும் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    மோகர்சிங் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள மற்ற கொள்ளையர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலையில் சி.பி.சி.ஐ.டி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் நிருபர்கள் போனில் தொடர்பு கொண்டு பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். ஆனால் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை. இதில் என்ன ரகசியம் என்பது அவர்களுக்கே வெளிச்சமாகும்.  #ChennaiTrainRobbery #RBIMoney
    சேலம்-சென்னை ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த கும்பல் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ரூ.5.78 கோடி கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரெயில் பெட்டி கூரையில் துளை போடப்பட்டு, சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் நடந்த இந்த கொள்ளையில் ஈடுபட்டது யார்? எந்த இடத்தில் வைத்து இந்த துணிகர கொள்ளை நடந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாமல் ரெயில்வே போலீசாரும், தமிழக போலீசாரும் திணறினார்கள்.

    ரூ.5.78 கோடியை அள்ளிச்சென்றது வடஇந்திய கொள்ளை கும்பல்தான் என்று உறுதியாக தெரியவந்த நிலையில், கொள்ளையர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. என்றாலும் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனம் தளராமல் போராடி, தேசிய அளவில் பல்வேறு தகவல்களையும் பெற்று அந்த கொள்ளை கும்பல் பற்றி துப்பு துலக்கி விட்டனர்.

    சரியாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களை போலீசார் நெருங்கியுள்ளனர். இதுபற்றிய முழு விபரம் வருமாறு:-

    பொதுத்துறை வங்கிகளில் சேர்ந்து விடும் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் பயன்படுத்த முடியாத கிழிந்த ரூபாய் நோட்டுக்களை அந்தந்த வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. அதன்படி சேலம் மண்டலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் சேர்ந்து விட்ட சுமார் 342 கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் (தடம் எண்.11064) ரெயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த 342 கோடி ரூபாயும், பண நோட்டு மதிப்புக்கு ஏற்ப பிரித்து 226 அட்டைப் பெட்டிகளில் அடைத்து அனுப்பப்பட்டன.

    அந்த 226 அட்டை பெட்டிகளும் ஒரு ரெயில் பெட்டிக்குள் முழுமையாக அடுக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. சேலம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 19 பயணிகள் பெட்டிகளுக்கு மத்தியில் பணம் இருந்த பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. மறுநாள் (ஆகஸ்டு 9-ந்தேதி) காலை அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரை வந்து சேர்ந்தும் பணம் இருந்த பெட்டி மட்டும் தனியாக யார்டு பகுதிக்கு கொண்டு நிறுத்தப்பட்டது.

    அன்று பகல் 11 மணி அளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் 226 பணப்பெட்டிகளை எடுத்துச் செல்ல வந்தனர். ரெயில் பெட்டியின் “சீல்” அகற்றி விட்டு உள்ளே சென்ற ஊழியர்கள், 4 அட்டை பெட்டிகள் உடைத்து திறக்கப்பட்டு பண நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் பெட்டியின் கூரையில் 2 அடி நீளம் 1½ அடி அகலத்துக்கு துளை போடப்பட்டு கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ரெயில்வே போலீசார் எழும்பூர் யார்டு பகுதிக்கு சென்று கொள்ளை நடந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தனர். பணம் இருந்த 4 பெட்டிகள் திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஒரு பெட்டியில் இருந்த ரூ.500, ரூ.1000 மதிப்புள்ள நோட்டுக்கள் அனைத்தையும் கொள்ளையர்கள் அள்ளி இருந்தனர்.

    மற்றொரு பெட்டியில் பாதி அளவு பணத்தை எடுத்திருந்தனர். 2 பெட்டிகளில் குறைந்த மதிப்புடைய 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் இருந்ததால் அவற்றை கொள்ளையர்கள் தொடவில்லை. மொத்தம் ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.


    4 பேர் சேர்ந்து கியாஸ் கட்டர் மூலம் ரெயில் பெட்டி கூரையில் துளை போட்டிருப்பது தடயவியல் சோதனையில் தெரிந்தது. ஆனால் அவர்கள் சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஓடிக் கொண்டிருந்தபோது கைவரிசை காட்டினார்களா? அல்லது நின்றபோது கைவரிசை காட்டினார்களா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் கிடைத்தன. துளை போடப்பட்ட பெட்டி கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்ததால், அங்கே துளைக்கான வெல்டிங் போடப்பட்டிருக்கலாமா என்று விசாரணை நடந்தது.

    பிறகு சேலம்-சென்னை வழித்தடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 12 இடங்களில் அந்த ரெயில் நிற்கும். அதில் விருத்தாச்சலம் ரெயில் நிலையத்தில் மட்டும் கூடுதல் நேரம் நிற்கும். ஆகஸ்டு 8-ந்தேதி இரவு அந்த ரெயில் விருத்தாசலத்தில் சுமார் 1 மணி நேரம் நின்றது. எனவே விருத்தாசலத்தில் வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாமா என்றும் போலீசார் விசாரித்தனர்.

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் வரை டீசலிலும், விருத்தாச்சலம் முதல் சென்னை வரை மின்சாரத்திலும் இயக்கப்படுகிறது. விருத்தாசலத்தில் இருந்து சென்னை வரை உள்ள மின் கம்பிகளுக்கு இடையே அமர்ந்து நிச்சயம் கொள்ளையடிக்க இயலாது. எனவே சேலம் முதல் விருத்தாசலத்துக்குள்தான் கொள்ளை நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    இதையடுத்து சேலம்- விருத்தாச்சலம் இடையில் உள்ள சுமார் 138 கி.மீ. தூர வழித்தடத்தில் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். ஆனால் எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை.

    இதற்கிடையே செங்கல்பட்டு, தாம்பரம் ரெயில் நிலைய சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்த போது ரெயில் பெட்டி கூரையில் துளை போடப்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் அந்த பெட்டி எழும்பூர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த போது கொள்ளை நடந்து இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டது.

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் காலையிலேயே சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்ட நிலையில் 11 மணிக்குத்தான் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வந்தனர். எனவே இடைப்பட்ட 2 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதிலும் சரிவர துப்பு துலங்காததால் விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

    தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். சேலம் முதல் சென்னை வரை ரெயில் நிலையங்களில் விசாரித்தனர். சுமார் 80 ரெயில்வே தொழிலாளர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்கப்பட்டனர். ஆனால் அதிலும் துப்பு துலங்கவில்லை.

    இதையடுத்து தொழில் நுட்ப உதவியை பயன்படுத்தி, கொள்ளையர்களை கண்டு பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடம் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவாகி இருந்த செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தனர்.

    சேலம் முதல் விழுப்புரம் வரை பதிவாகி இருந்த செல்போன் உரையாடல்கள் உன்னிப்பாக கேட்கப்பட்டன. அதில் சந்தேகப்படும் படியான உரையாடல்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அந்த உரையாடல்கள் எந்தெந்த எண்கள் கொண்ட மொபைல் போன்களில் இருந்து சென்றுள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது.

    முதல் கட்ட விசாரணையில் அந்த செல்போன் எண்களை பயன்படுத்துபவர்கள் சேலம் பகுதிக்கு புதிதாக வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த செல்போன் எண்களை உடையவர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வந்தனர் என்று ஆய்வு நடந்தது. தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

    சில மாத கடும் போராட்டத்துக்குப் பிறகு சமீபத்தில் அந்த செல்போன்களுக்கு உரியவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வசிக்கும் கொள்ளையர்கள் அவர்கள் என்ற துப்பு துலங்கியுள்ளது. அந்த கொள்ளையர்கள் வட இந்தியாவில் பல நகரங்களில் பெரிய அளவில் கைவரிசை காட்டியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

    4 அல்லது 5 கொள்ளையர்கள் சேலம் பகுதியில் சுமார் 1 வாரம் தங்கியிருந்து நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் சேலம் ஐங்‌ஷன் ரெயில் நிலைய சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் சேலம்- விழுப்புரம் இடையே நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் பதிவான சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் மூலம் கொள்ளையர்களை அடையாளம் கண்டிருப்பதாக தெரிகிறது.

    தேசிய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள குற்ற ஆவண காப்பக பதிவேடுகளில் உள்ள குற்றவாளிகளின் படங்களுடன், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வைத்திருந்த சந்தேகப்படும் நபர்களின் படங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. அதில் சில குற்றவாளிகள் பற்றிய தகவல்களை மத்திய பிரதேச போலீசார் அளித்துள்ளனர்.

    இதன் மூலம் ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த கும்பல் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த கொள்ளையர்களைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #ChennaiTrainRobbery #RBIMoney 
    ×